குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா படை ஆதரவாளர்கள் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு திரண்டு போராடியதோடு, தூதரகத்தையும் சூறையாடினர். இந்த சூழலில், இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்வீட்டில், "ஐஎஸ்ஐஎஸ், அல் நுஷ்ரா, அல்கொய்தாவுக்கு எதிராகப் போராடி வந்த ஜெனரல் சுலைமானைக் கொலை செய்து, சர்வதேச தீவிரவாதத்தை அமெரிக்கா செய்துள்ளது. இது மிகத்தீவிரமான பேராபத்தை விளைவிக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகப்படுத்தும் முட்டாள்தனமான செயல் இது. நேர்மையற்ற முறையில், யோசிக்காமல் செய்யும் சாகசங்களுக்கெல்லாம் அமெரிக்கா பொறுப்பேற்று அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்" என எச்சரித்துள்ளார்.