அமெரிக்கவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கோடு தொலைபேசி வாயிலாக உரையாடினார். ஜோ பைடன், சீனா தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக பாதுகாப்பு செயற்குழு ஒன்றை அமைத்த சிலமணி நேரங்களுக்குப் பிறகு இந்த உரையாடல் நடைபெற்றது.
சீன அதிபருடனான உரையாடலின்போது, சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைகள், ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள், தைவான் பிரச்சனை உள்ளிட்டவை குறித்த தனது கவலையை ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சீனா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான மோதல், இரு நாடுகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் எனவும், சீன இறையாண்மை தொடர்பான விஷயங்கள் என்பதால், ஹாங்காங், சின்ஜியாங், தைவான் பிரச்சனைகளை அமெரிக்கா கவனமாகக் கையாளும் என நம்புவதாக சீன அதிபர் கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இரு நாட்டுத் தலைவர்களும் கரோனா பரவல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.
சீனாவைக் கையாள புதிய குழு, அந்த நாட்டு அதிபருடன் நேரடி உரையாடல் என சீனாவிற்கெதிராக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் பைடன். அதேநேரம் இருவருக்குமிடையேயான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.