நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா சார்பில் அனுப்பப்பட்ட லூனா - 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா சார்பில் சுமார் ரூ. 1662 கோடி மதிப்பீட்டில் கடந்த 10 ஆம் தேதி லூனா - 25 என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதையடுத்து லூனா - 25 விண்கலம் கடந்த 19 ஆம் தேதி தொடர்பை இழந்த நிலையில் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. உந்து விசை அமைப்பில் மாற்றம் செய்தபோது ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் லூனா - 25 விண்கலம் மோதியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட லூனா - 25 விண்கல திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடத்தில் 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா விண்வெளி மையம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.