ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். ஈரான் பிரச்சனை, 5ஜி தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இறக்குமதி, ஏற்றுமதி வரிவிதிப்பு தொடர்பான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று பிரதமர் மோடி கூறிய யோசனையை டிரம்ப் வரவேற்றுள்ளார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
முதல் நாள் அமர்வுகளில் பிரிக்ஸ் தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மனித குலத்திற்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு உதவும் நாடுகளை தனிமைப்படுத்தவும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடவும் மோடி அழைப்பு விடுத்தார். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோருடன் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தீவிரவாதம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
மூன்று நாடுகளும் தீவிரவாதத்தை முழு மனத்துடன் கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, பிரேசில், உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்தார். இரண்டாவது நாளான இன்று காலை மகளிர் தொழில் முன்னேற்றம் தொடர்பான அமர்வில் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டதோடு, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தோடு, ”மோடி எவ்வளவு சிறப்பான நபர்” என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய நாட்டு பிரதமர் ஸ்காட் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பது முதன் முறை அல்ல. இந்தியா பிரதமருடன் ஆஸ்திரேலிய பிரதமர் அடிக்கடி செல்ஃபி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.