ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே சரிந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு, நாரா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் மர்ம நபரால் சுடப்பட்டது உலக நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவையைத் தொடர வேண்டும் என்றும், இறைவனை பிரார்த்திப்பதாகவும் உலக நாடுகளின் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமருக்கு ஷின்சோ அபேவுக்கு உலகம் தர வாய்ந்த சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை ஜப்பான் நாட்டின் 'NHK' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மறைந்த ஷின்சோ அபேவுக்கும், ஜப்பான் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஷின்சோ அபேவைத் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், அவர் முன்னாள் கடற்படை வீரர் என்பது தெரிய வந்தது. மேலும், ஜப்பான் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷின்சோ அபே, கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2007- ஆம் ஆண்டு வரையும், 2012- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரையும் இரண்டு முறை பிரதமராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.