உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது.
அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள்.
அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர்.
ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர்.
இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.