ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஆறாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவரும் இந்திய அரசு, ஆப்ரேஷன் கங்கா மூலம் அவர்களை தாயகம் அழைத்துவருவதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்துவருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான இந்தப் போரில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் கார்கிவ் நகரில் நடந்த குண்டுவீச்சில் பலியாகியுள்ளார். அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்றபோது இந்தக் குண்டுவீச்சில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.
இந்திய மாணவர் பலியானதை உறுதிசெய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், கார்கிவ் மற்றும் பிரச்சனைக்குரிய பிற பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களை வலியுறுத்தி உள்ளது.