இளவரசி டயானாவை போல மேகன் மார்கலும் அந்நாட்டு ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கலை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் உலக அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக இங்கிலாந்து அரச குடும்பம் குறித்த செய்திகளை வெளியிடுவதில் அந்நாட்டு பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. அரசு குடும்பத்தின் உணவு முதல் உடை வரை எதுவாக இருந்தாலும் அது குறித்த செய்திகள் அந்நாட்டு பத்திரிகையில் உடனே இடம்பிடித்துவிடும். அந்த வகையில், இது குறித்த தனது அச்சத்தை இங்கிலாந்து இளவரசர் ஹாரி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே தந்தையை பிரிந்து வளர்ந்த மேகன், அவர் தந்தைக்கு எழுதிய கடித்தை தி மெயில் நாளிதழ் அண்மையில் வெளியிட்டது. தனிப்பட்ட முறையில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் சில வரிகளை நீக்கி அதன் பொருளை திரித்து வெளியிட்டதாக அந்த நாளிதழ் மீது மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்துக்களை கூறியுள்ள ஹாரி, மேகனுக்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வரலாறு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு அச்சத்தை தனக்கு தருவதாக பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக அளவில் பெரிதும் கொண்டாடப்பட்ட டயானா, அந்நாட்டு ஊடகத்தினர் புகைப்படம் எடுக்க துரத்திய போதே கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்நாட்டு ஊடக செய்திகளால் டயானாவின் தனிப்பட்ட வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டது என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது. இதனை குறிப்பிடுவது போன்று, தன்னுடைய தாய் டயானாவை தொடர்ந்து தற்போது மேகனும் ஊடகத்திற்கு இரையாவது போல், தான் உணர்வதாகவும், இதனால் ஏற்கனவே ஒரு உயிரை தான் இழந்துள்ளதாகவும், இளவரசர் ஹாரி வேதனை தெரிவித்துள்ளார்.