அமெரிக்காவின் கொலராடோ நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்டு குட்டிங். இவர் அடிக்கடி ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அங்கு நடக்கும் விஸ்கி பாட்டில் ஏலத்தில் பங்கேற்று விதவிதமான விஸ்கி பாட்டில்களை வாங்கிவந்து சேமித்து வைத்திருக்கிறார். ஏறத்தாழ 20 ஆண்டுகளில் சுமார் 3,900 விஸ்கி பாட்டில்களை சேமித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்ட நிலையில், இப்போது அந்த பாட்டில்கள் ஏலத்துக்கு வருகின்றன. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு சுற்றுகளாக ஏலம் நடைபெறப்போகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளான மக்கலான், போமோர், ஸ்ட்ரோம்நெஸ் போன்றவற்றின் விஸ்கி பாட்டில்கள் இந்த ஏலத்தில் இடம்பெற உள்ளன.
சுமார் 60 ஆண்டுகள் பழமையான மக்கலான் விஸ்கி ஏலத்திற்கு வரவிருக்கிறது. பாப் இசை கலைஞர் வலேரியோ அதாமியின் பெயர் பொறித்த 12 சிங்கிள் மால்ட் ஸ்காட் பாட்டில்களும் ஏலமிடப்படும். ஏற்கெனவே குட்டிங்கின் சேகரிப்பில் இருந்து ஏலமிடப்பட்ட ஸ்காட்லாந்து விஸ்கி பாட்டில் ஒன்று 1.1 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. 3,900 பாட்டில்களை ஏலமிட்டால் சுமார் 10 மில்லியன் டாலர் வரை ஈட்டலாம் என சொல்லப்படுகிறது.