துருக்கி - சிரியாவில் சில தினங்கள் முன் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை அதற்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மீட்புப்பணிகள் தொடர்பான காட்சிகள், செய்திகள் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 46,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை வரலாறு காணாத பேரிடர் என அந்த நாடு அறிவித்துள்ளது.
இந்நிலையில், துருக்கி - சிரியா எல்லையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் ஒரு சேர சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. துருக்கியின் அன்டகயா என்ற இடத்தில் இந்திய நேரப்படி இரவு 10.54 மணியளவில் மிதமான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பயத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இருந்த போதும் 3 பேர் உயிரிழந்ததாகவும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லு தெரிவித்துள்ளார். இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.