தனது 9 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்று குளியல் தொட்டியில் போட்டு கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
நியூயார்க் நகரில் கியூன்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷாம்தாய் அர்ஜுன், இதே கட்டிடத்தில் மற்றொரு குடியிருப்பில் வசித்துத் வரும் சுக்ஜிந்தர் சிங் என்ற மனைவியை இழந்த பஞ்சாபி ஒருவரின் மகளை வளர்த்து வந்தார். தந்தை சுக்ஜிந்தர் சிங் வேலைக்குச் செல்லும்போதும், மற்ற நேரங்களிலும் தாயில்லாத 9 வயது குழந்தையான அஷ்தீப் கவுர், ஷாம்தாய் பொறுப்பிலேயே வளர்ந்தார்.
அந்த குழந்தையின் வளர்ப்பு தாயான இவர் கடந்த 2016 ஆகஸ்ட் 19-ம் தேதி அஷ்தீப் கவுரை கழுத்தை நெரித்து கொன்று குளியல் தொட்டியில் போட்டுள்ளார். இதனையடுத்து குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின்படி விசாரணை நடைபெற்று ஷாம்தாய் தான் கொலையாளி என கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கியூன்ஸ் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான் ரியான் கூறும்போது, “கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கொடூர குற்றத்தை அப்பெண் செய்துள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையிலான தண்டனையை நீதிபதி அளித்துள்ளார்” என்றார்.