இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது. கடந்த வருடம் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.
ஆனால் அதேசமயம் ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய சலுகை அளிக்கப்பட்டது.
இதனிடையே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அளித்துவந்த வரியற்ற சலுகையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகளுக்கு அமெரிக்க அளித்தவரும் சலுகை வரும் மே மாதம் 4-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது.
இதனால் தற்போது அளித்துவரும் சலுகையை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. அதேபோல் அமெரிக்காவும் இந்த சலுகை குறித்து அனைத்து நாடுகளுடனும் பேசப் போவதாக அந்நாட்டு எரிசக்தித் துறை செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் கம்பாஸ் தெரிவித்துள்ளார்.