குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.
இது குறித்துப் பேசிய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜான் ஸ்மித், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கு டிரம்ப் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. டிரம்ப் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உறுதி செய்துள்ளார். மேலும், அவர் கூறிய அந்த தீர்ப்பில், அமெரிக்காவின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சதி செய்தது உள்பட 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்துள்ளார்” என்று தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கில் டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, வாஷிங்டனிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்ப் இன்று நேரில் ஆஜராகவிருப்பதாகக் கூறப்படுகிறது.