ஈரானில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 60 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈரான் நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரானின் கிஷ் துறைமுக பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீன்பிடி தொழிலாளர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். துறைமுகங்கள் மூடப்பட்டதால், நாடு திரும்ப வழியில்லாமல் அங்கு தவித்து வரும் மீனவர்களை உடனடியாக அரசு மீட்பு நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.