Skip to main content

மர்மமான முறையில் 350 யானைகள் உயிரிழப்பு!! மனிதர்கள் காரணமா??

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

botswana elephant death issue

 

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா வனப்பகுதியில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

வன உருவாக்கத்தில் மிக முக்கிய பங்குடைய உயிரினமான யானை இனம், உலகின் பல நாடுகளில் அழிவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிரிக்க வனப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மர்மமான முறையில் யானைகள் உயிரிழப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டின் ஒகாவாங்கோ டெல்டா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவிலான யானை மரணங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்க்யூ எனும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டாக்டர் மெக்கான் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இதுகுறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "போட்ஸ்வானா காடுகளில் ஒரு மணிநேரம் விமானத்தில் பறந்து பார்த்தபோது 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டோம். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது. யானைகள் எதனால் உயிரிழந்த என்பது குறித்த ஆய்வுகள் அவற்றின் உடலிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில் இதன் ஆய்வு முடிவுகள் தெரிய வரும்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இறந்த யானைகளின் உடலிலிருந்த தந்தங்கள் பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளதால், தந்தத்திற்காக யானைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்