இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா நேற்று லண்டனில் நடைபெற்றது.
லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ்க்கு முடிசூட்டப்பட்டது. தேவாலயத்தின் பேராயர் செயிண்ட் எட்வர்ட் கிரீடத்தை மன்னருக்கு சூட்டினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தேவாலயம் வரை மன்னர் சார்லஸ்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் முடிசூட்டும் விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
மேலும், லண்டனில் இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், “உலகளாவிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தால், நமது டி.என்.ஏ. மிகவும் வலிமையானது. நமது அறிவுக்கு எந்த சவாலும் இல்லை. நாம் எங்கு சென்றாலும், அற்புதமாகச் செயல்படுகிறோம். ஆனால் நம் நாட்டில் அமைப்பின்மையின் காரணமாக நாம் பாதிக்கப்படுகிறோம். பல வளர்ந்த நாடுகளில் ஒரே அமைப்பு இருப்பதால் அவைகள் சாதாரணமாக வளர்கின்றன. அதேசமயம், கடந்த 8 ஆண்டுகளில், நாமும் அமைப்பு முறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். நமது பாரதம், தற்சமயம், முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. பாரதத்தின் எழுச்சி தடுக்க முடியாதது” என்று பேசினார்.