கல்லூரிக்கான கல்விக் கட்டணமாக தேங்காய் வழங்கலாம் என பாலி தீவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாலி தீவானது இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமாகும். சுற்றுலா மூலம் ஈட்டும் வருவாயே அந்நாட்டு அரசிற்கு பிரதான வருவாயாகும். கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடு பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், பாலியின் டெகலாலாங் பகுதியில் உள்ள வீனஸ் ஒன் டூரிஸம் அகாடமி என்ற கல்வி நிறுவனமானது, கல்லூரி கட்டணத்தை மாணவர்கள் தேங்காயாக செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து வீனஸ் ஒன் டூரிஸம் அகாடமியின் இயக்குநர் வயன் பசேக் ஆதி புத்ரா கூறுகையில், முன்னர் கல்விக்கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூலித்து வந்தோம். முதல் தவணையில் 50 சதவிகிதம், இரண்டாம் தவணையில் 20 சதவிகிதம், மூன்றாம் தவணையில் 30 சதவிகிதம் என்ற முறையைப் பின்பற்றினோம். கரோனா பாதிப்பால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டோம். நாங்கள் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறோம். எனவே மாணவர்கள் தங்கள் கல்விக்கட்டணமாக தேங்காய் கொண்டு வரலாம்" எனக் கூறினார்.