ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.
மேலும் அப்பகுதிகளில் அமைதியைப் பேண ரஷ்யப் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டார். இது போர் பதற்றத்தை அதிகரித்திருப்பதுடன், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளின் மேல் பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.
இதனைத்தவிர ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புதின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் கூறியுள்ளதோடு, ரஷ்ய மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யா மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாகவும், அது ரஷ்யாவிற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா இன்னும் மோசமாக நடந்துகொள்ளும் என அஞ்சுவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.