சீனாவுடனான பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒரே அணியில் இணைந்துள்ளன.
இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் ஆயுதங்கள் தயார்படுத்தப்பட்டாலும், மறுபுறம் உலகநாடுகளின் உதவியோடு சீனாவிற்குப் பொருளாதார ரீதியிலான பதிலடியைக் கொடுக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் தலைவர்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி முதலில் சர்வதேசச் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கவும், சீன நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, சீன நிறுவனங்களின் மோனோபோலி நிர்வாக முறையை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்டவை முக்கிய நடவடிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஹாங்காங் மற்றும் தென் சீனக்கடல் விவகாரங்களும் இதில் முக்கியத்துவம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் சீனாவின் சர்வதேச வணிகத்தில் இது மிகப்பெரிய சரிவாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.