உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்க்கு, தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முயன்று வந்தன. இதில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதியளித்துள்ளன. அந்த நாடுகளில், பைசர் நிறுவனதின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்கா, கரோனா தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. மாடர்னா என்னும் மருந்து நிறுவனமும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனமும் இந்த புதிய தடுப்பூசியை தயாரித்துள்ளன.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதியளித்ததை அடுத்து, இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.