Skip to main content

புரூஸ் லீயின் மரணத்திற்குக் காரணம் இதுவா? - 49 ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Action King Bruce Lee's - Answers After 49 Years

 

உலக அளவில் 20ம் நூற்றாண்டில் 'அதிரடி' என்ற வார்த்தையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் புரூஸ் லீ. தற்காப்புக் கலைஞர், இயக்குநர், நடிகர், தத்துவவாதி எனப் பன்முகம் கொண்டவர். 1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த புரூஸ் லீ சீனர் என்றாலும் அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிய அதிசயத்துக்குரியவர். இவரிடம் சண்டையிட்டுக் காயமடையாமல் யாரும் சென்றதில்லை எனக் கூறும் அளவிற்கு  குங்ஃபூ கலையில்  வல்லவர்.

 

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட புரூஸ் லீ, 1973 ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி தனது 32 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் உலக இளைஞர்களை ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியது. புரூஸ் லீயின் உயிரிழப்பு தொடர்பாகத் தற்பொழுது வரை பல சர்ச்சைகள் கொட்டிக் கிடக்கிறது. பலமுறை அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டாலும் அவரை விஷத்தாலோ, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதத்தாலோ அவரைக் கொல்ல முடியவில்லை என 80ஸ், 90 ஸ் கிட்ஸ்கள் சொல்லும் கதைகள் இன்றளவும் நீடிக்கிறது.

 

இன்றளவும் அவரது மரணம் என்பது எந்தத் தெளிவான தகவலும் இல்லாத ரகசியமாகவே  நீடித்து வருகிறது. புரூஸ் லீ பெருமூளை வீக்கம் என்னும் நோயினால் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது. இந்த பெருமூளை வீக்கம் ( Cerebral Edema) என்ற பிரச்சனை காரணமாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி ஒருமுறை தலைவலி ஏற்பட்ட பொழுது நடிகை பெட்டி டிங் பீ வலி நிவாரணி மருந்து ஒன்றைக் கொடுத்துள்ளார். அன்று மாலை அந்த மருந்து எடுத்துக் கொண்ட புரூஸ் லீ அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. அந்த நேரத்தில் நடிகை கொடுத்த வலி நிவாரணி மருந்தினால் மூளை வீக்கம் ஏற்பட்டு அவர் இறந்ததாக மருத்துவர்கள் நம்பினர். ஆனால் தற்பொழுது 'கிளினிக்கல் கிட்னி ஜெர்னல்' (Clinical Kidney Journal) என்ற ஒரு ஆய்வு நிறுவனம் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் அதிக தண்ணீர் குடிப்பதை புரூஸ் லீ வாடிக்கையாக வைத்திருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்து போய் இருக்கலாம் என்ற முடிவைத் தெரிவித்துள்ளது. அதிகப்படியான நீரை வெளியேற்ற முடியாமல் அவர் இறந்ததாக அந்நிறுவன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்