உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஒவ்வொரு துறையாக இன்று (அக் 5) முதல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் எனும் கிருமியை கண்டுபிடித்ததற்காக ஹார்வே ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் மைக்கேல் ஹங்டன் ஆகிய மூன்று பேருக்கு இந்த ஆண்டின் மாருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹார்வே ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய இருவரும் அமெரிக்கர்கள் மற்றும் மைக்கேல் ஹங்டன் இங்கிலாந்தை சார்ந்தவர்.
ஹெபாடிடிஸ் சி எனும் கிருமி கல்லீரலை பாதிக்கக்கூடிய பெரும் கிருமி. இவர்கள் மூவரும் தற்போது இந்த கிருமியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து ஒருவரை குணப்படுத்த முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். அதற்காக இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் தாக்குதலில் வருடந்தோறும் சுமார் 70 மில்லியன் நபர்கள் பாதிக்கப்படுவதாகவும் அதில் 4 இலட்சம் பேர் இறப்பதாகவும் தெரிவிக்கின்றது உலக சுகாதார நிறுவனம்.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் பட்டியலில் உள்ளனர். இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 5ஆம் தேதியான இன்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இயற்பியல் துறைக்கான விருது 6 ஆம் தேதியும், வேதியியலுக்கு 7 ஆம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 8 ஆம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு 9 ஆம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 10 ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.