செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.