திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீதர். இவர் தி.மு.கவில் மாவட்ட மீனவரனி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் இவருடைய உறவினர் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இவருடைய உறவினர் மகன் மணிகண்டன் என்பவர் முன் விரோதம் காரணமாக தி.மு.க மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஶ்ரீதர் வீட்டின் மீது கல் வீசியுள்ளார். இதில் கண்ணாடிகள் உடைந்தது. இது குறித்து ஶ்ரீதர், அந்த மணிகண்டன் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
அப்போது புகாரை பெற்ற போலிசார், விசாரணை செய்து நாளை நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், உடனடியாக வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி எஸ் பி விஜயகுமார், விரைந்து வந்து அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் அந்த இளைஞர் கல் வீசிய காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.