Skip to main content

உருவாக்கப்படாத தலைமை ஆசிரியர் பணியிடங்கள்; அதிகாரிகள் அலட்சியம் 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

officers do not create headmasters posting in primary schools 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்குத் தலைமை ஆசிரியர்களையே நியமிக்கப்படாமல் அலட்சியமாக உள்ளதால் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

 

திருமயம் ஊராட்சி ஒன்றியம் கும்மங்குடி கிராமத்தில் அரசு உதவி பெறும் சரஸ்வதி கலாசாலை தொடக்கப்பள்ளியை அரசு ஏற்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் கோலாகலமாக விழா நடத்தி திறந்து வைத்துள்ளார். ஆனால் இந்தப் பள்ளிக்கு 10 ஆண்டுகளாகவே தலைமை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படாமல் 2 இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டே செயல்படுகிறது. 2022-2023 கல்வி ஆண்டில் 32 மாணவர்கள் பயின்று வந்தார்கள்.

 

அதேபோல கறம்பக்குடி ஒன்றியம் முருங்கைக்கொல்லை கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும். இதே போல குன்றாண்டார் கோயில் ஒன்றியம் ஒடுக்கூர் ஊராட்சி கொட்டப்பள்ளம் கிராமத்திலும் 2018 ஆம் ஆண்டு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. வட்டாரக்கல்வி அலுவலர்கள் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமல் உள்ளது. இங்கு 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதே கல்வி ஆண்டில் அன்னவாசல் ஒன்றியம் உய்யக்குடிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு இடைநிலை ஆசிரியருடன் பள்ளி செயல்படுகிறது. இங்கும் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இங்கு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 24 ஆகும். இப்படி பல பள்ளிகள் உள்ளன.

 

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, "தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களின் சிரமங்களை தவிர்த்து அனைவரையும் கல்வி கற்க வைக்கும் நல்ல எண்ணத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகளின் எண்ணிக்கையில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. அந்த புதிய பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகாரிகள் உருவாக்கி அரசுக்கு தெரியப்படுத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாணை இருந்தும் கூட அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது.

 

அரசின் 7.5% இட ஒதுக்கீடு அறிவிப்பு மற்றும் கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின்  சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும்" என்றனர். தமிழ்நாடு அரசும் கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.