நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்து குடிதண்ணீருக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம். இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் முறையாக நீர்நிலைகளை பராமரிக்காததும், ஆற்று மணலை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்ததும் தான். ஆனால் அரசாங்க கணக்குப்படி ஒவ்வொரு வருடமும் குளம், ஏரி, வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதாக உள்ளது. ஆனால் உண்மையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துகிடக்கிறது. தண்ணீர் தேங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. வரத்து வாய்க்கால்களை காணவில்லை.
இனியும் அரசாங்கத்தை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த இளைஞர்கள் நீர்நிலை பாதுகாப்பை கையில் எடுத்துள்ளனர். தூர்ந்துகிடக்கும் குளம் ஏரிகளை தூர்வாரி தண்ணீரை சேமித்தால் நிலத்தடி நீரை பாதுகாக்கலாம் என்ற முடிவுக்கு வந்த இளைஞர்கள் சாதித்தும் காட்டிவிட்டனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் கடந்த ஆண்டு நீர்நிலைகளை தூர்வார முடிவெடுத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் பல முறை நீதிமன்றம் சென்று தலா 63 ஏக்கர் பரப்பளவுள்ள 2 குளங்களையும், சில சிறிய குளங்களையும் தூர்வாரி 8.5 கி.மீ வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்து குளங்களில் தண்ணீரை சேமித்தனர்.
அதன் பலனை கண்டனர். அதாவது, அதுவரை 270 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குளங்களில் தண்ணீர் தேக்கியதன் பலனாக கடகடவென உயர்ந்து 60 அடிக்குள் வந்தது. இதற்கு ஆன செலவு ரூ 58 லட்சங்கள். அத்தனையும் உள்ளூர் வெளியூர் வெளிநாடு வாழ் இளைஞர்களின் உழைப்பில் வந்த பணம். நீர் உயர்ந்திருப்பதை பார்த்ததும் பணம் ஒரு பொருட்டில்லை என்று மகிழ்ந்தனர் இளைஞர்கள்.
அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் கடந்த ஆண்டு அம்புலி ஆறு காட்டாற்றில் மண்ணால் அணை கட்டி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றனர். புயல் நேரத்தில் மின்சாரம் இல்லாத போது குளத்து நீர் பயிர்களை காப்பாற்றியது. இந்த ஆண்டும் அதே போன்ற பணிகள் நடந்து முடிந்தது.
இதைப் பார்த்த கொத்தமங்கலம் இளைஞர்கள், தங்கள் ஊரில் ஆயிரம் அடியிலும் தண்ணீர் கிடைக்கவில்லை, அதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று கொத்தமங்கலம் இளைஞர்மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கிராமத்தில் உள்ள அணைகள், குளங்கள், வரத்து வாய்க்கால்களை சுமார் 40 நாட்களாக சீரமைத்து வருகின்றனர். 100 நாள் வேலையில் குளம் வெட்டி மண் சுமந்து சேமித்த பணத்தை நீர்நிலை பாதுகாப்புக்காக இளைஞர்கள் குளம் தூர்வாரும் பணிக்காக ரூ 10 ஆயிரத்தை ராஜம்மா பாட்டி கொடுக்க, அதன் பிறகு தினம் தினம் நிதி கொடுத்து இளைஞர்கள் பணிக்கு துணையாக நிற்கிறார்கள் இளைஞர்களும் கிராம மக்களும்.
அடுத்து வடகாடு கிராமத்திலும் குளம் சீரமைப்பு பணிகளை இளைஞர்கள் தொடங்கி, செய்து வருகின்றனர். அருகில் உள்ள மாங்காடு கிராம இளைஞர்கள் குளம் சீரமைப்புக் குழு உருவாக்கி பணிகளை தொடங்க தயாராகிவிட்டனர்.
இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம் களத்தூரில் தண்ணீரை கண்ட கடைமடைப் பகுதி விவசாயிகள் சங்கமான கைஃபா மற்றொரு பெரிய பணியை கையில் எடுத்துள்ளனர்.
பேராவூரணியில் பெரிய குளம் என்று அழைக்கப்படும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை சீரமைக்க பல நாட்களாக திட்டமிட்டு குழு அமைத்து வந்த நிலையில் இன்று களத்தில் இறங்கிவிட்டனர். ஜெ சி பி, டிப்பர் டிராக்டர்களுடன் குள்தில்தூர்வாரும் பணியை தொடங்குள்ள இளைஞர்கள் குளத்தை தூர்வாருவதுடன வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி இந்த வருடம் பெரிய குளத்தில் தண்ணீரை தேக்கி, குறைந்து வரும் நிலத்தடி நீரை மீட்போம். இதே போல பல நீர்நிலை பாதுகாப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு பணிகளில் கைஃபா தொடர்ந்து செயலாற்றும் என்றனர்.
இந்த தகவல் அறிந்த இதே பகுதியை சேர்ந்த சிவக்குமரன் என்பவர், அமெரிக்காவில் வசித்தாலும் தங்கள் ஊர் நீர்நிலை உயர வேண்டும், அதற்கு எனது சிறு உதவி முதலில் இருக்க வேண்டும் என்று ரூ.ஒரு லட்சம் பணத்தை நிதியாக கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சி.. எப்படியும் எடுத்த பணியை எளிதில் முடிப்போம் என்றனர்.
அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை இளைஞர்கள் செய்ய தொடங்கியிருப்பதைப் பார்த்து மக்கள் பாராட்டி வருகிறார்கள்.