
தென்காசி மாவட்டம் கற்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். 22 வயதாகும் இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமலைக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாட்களாக இளம்பெண் திருமலைக்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் திருமலைக்குமார் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம்பெண் பேசாமல் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் திருமலைக்குமார் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென இளம்பெண்ணை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைகாக பாளையம் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த திருமலைக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.