தி.மு.க. அரசின் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடந்து வருகிறது. அப்போது,10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், "கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்தி இருந்தோம்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, "சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமை அளிக்கிறது. கரோனாவை கட்டுப்படுத்தியது, உயிரிழப்பைத் தடுத்த நடவடிக்கைகளுக்காக முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.
அத்தகைய சூழலில் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், மருத்துவர்கள் உழைத்த விதம் சிறப்பானது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்" என்றார் ஜி.கே.மணி. இவரின் இத்தகைய பாராட்டினை அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.