சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இயங்கி வரும் பிரபலமான தனியார் பள்ளியில், பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். ஆக. 6 ஆம் தேதி, பள்ளியில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் முன்கூட்டியே சென்றது தொடர்பாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், திடீரென்று விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்களைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுகுறித்து அந்த மாணவர், தனது அண்ணனுக்கு தகவல் அளித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அன்று இரவே ஏற்காட்டுக்கு வந்து, விடுதியில் இருந்த தனது தம்பியை வெளியே அழைத்துச் சென்று விட்டார். அதற்கு அடுத்த நாள், அந்த மாணவனின் உறவினர்கள் பத்து பேருடன் பள்ளிக்குச் சென்றனர். அவர்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருந்த அறைக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கினர். இதில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளித்தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவனின் அண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.