கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள கொல்லிருப்பு கிராமத்தில் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் அமைப்பதற்காக, அக்கிராமத்தில் நிலம் மற்றும் வீடு கொடுத்தவர்களுக்கு செக்யூரிட்டி வேலை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சோலார் பேனல் சுற்றி அமைந்துள்ள முள்வேலிகளை அகற்றி விட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு என்.எல்.சி நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைத்து விட்டால், செக்யூரிட்டி வேலையில் பணிபுரியும் 40 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பம் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்பதால், சுற்றுச்சுவர் அமைக்கக் கூடாது என்றும், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் 40 தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்காமல் என்.எல்.சி நிர்வாகம் இன்று (03.02.2021) சுற்றுச்சுவர் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோலார் பேனல் அமைந்துள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை அறிந்த பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க வேண்டும் என்று கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல்துறையினர் மற்றும் என்.எல்.சி அதிகாரிகள் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர். அதேசமயம் என்.எல்.சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேலையை வழங்காவிட்டால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.