
சென்னை ராயபுரத்தில் மருத்துவமனையில் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சவிதா (42). கடந்த சில மாதங்களாகவே அவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததாக தெரிந்தது. இதனால் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். இதன் காரணமாக சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஏ ரெயினி மருத்துவமனையில் கடந்த 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி 16ஆம் தேதி அவருக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சவிதா இயற்கை உபாதை கழிக்க முயன்ற பொழுது மிகவும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய சிறுநீரக பையில் உள்ள நரம்பு தவறுதலாக அறுவை சிகிச்சையில் கட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் சவிதாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சவிதா ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் சவிதாவின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.