
தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து துவங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக, மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளே அறிவித்தார் மு.க. ஸ்டாலின். அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், மகளிருக்கான இலவசப் பேருந்து என்ற பெயருடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், ஸ்டாலின் பேருந்து வருதுப்பா என்று மகிழ்ச்சியை ஆண்கள், பெண்கள் என பலரும் வெளிப்படுத்திவருகிறார்கள். இந்தச் சூழலில், மகளிருக்கான இலவசப் பேருந்து என்பதற்குப் பதிலாக, மகளிருக்கான முதல்வரின் இலவசப் பேருந்து என பெயரை மாற்றியமைத்தால், ஸ்டாலின் பெயர் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும் என்று அரசின் கவனத்துக்கு சில சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அதாவது, காமராஜரின் மதிய உணவுத்திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், கலைஞரின் காப்பீட்டு திட்டம் என்று எப்படி நிலைபெற்றிருக்கிறதோ அதேபோல இதுவும் நிலைபெறும் என்று அந்தக் கோரிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம்.