Skip to main content

3ம் வகுப்பு படிக்கும் குழந்தை கொடுத்த கடிதம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
mkstalin


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10-04-2018) காவிரி உரிமை மீட்புப் பயணத்தை கோட்டூர் பகுதியில் முடித்து வைத்தபோது பேசுகையில், 
 

இந்தக் கூட்டத்தில் என்னிடம் வந்த முத்தமிழ் என்ற 3 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கொடுத்த கடிதத்தில், “காவிரித் தாயை அழைத்து வாருங்கள், நாளை எங்களுடைய தலைமுறை கையேந்தி நிற்கக்கூடாது தலைவா”, என்று எழுதியிருந்தது. இன்று காலை, திருவாரூர் நகரில் நாங்கள் நடைபயணம் வந்தபோது, அந்த சிறுமி, “காவிரி உரிமையை பெற்றே தீருவோம்”, என்று முழங்கிக் கொண்டிருந்தாள். எதற்காக சொல்கிறேன் என்றால், காவிரித் தாயின் உரிமையை பெற வேண்டும் என்ற உணர்வு எல்லோருடைய மனதிலும் இடம்பெற்று இருக்கிறது. 
 

இன்று எல்லோரும் இதை புரிந்து கொண்டு இருந்தாலும், காவிரிப் பிரச்சினையை முழுமையாம புரிந்துகொண்டு, அதற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது தலைவர் கலைஞர் அவர்கள் மட்டும் தான். அவர் பிறந்த 1924 ஆம் ஆண்டிலேயே காவிரிப் பிரச்சினை தொடங்கிவிட்டது. அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதுதான், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது, பலமுறை டெல்லிக்கு சென்று, கர்நாடக மாநிலத்துக்கு எல்லாம் சென்று பிரதமர், முதல்வர்களிடம் வாதிட்டு, போராடி நமது உரிமைகளை மீட்டார். அதுமட்டுமல்ல, அவர்களை எல்லாம் தமிழகத்துக்கு வரவழைத்து நமது பிரச்சினைகளை எடுத்துரைத்தார். 
 

அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்து பெற்று நடைபெறும் இந்தப் போராட்டம் நிச்சயமாக, உறுதியாக வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நாள் வெகுவிரைவில் வரத்தான் போகிறது. அதுமட்டுமல்ல, தமிழக மக்களின் வாழ்த்துகளையும் பெற்று இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இந்தப் போராட்டம் வெற்றிபெறும் வரையில் நாங்கள் தூங்கப் போவதில்லை, ஓய்வெடுக்கப்போவதில்லை, எங்களுடைய இந்தப் போராட்டத்துக்கு நீங்களும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு உரையாற்றினார்.
 

சார்ந்த செய்திகள்