கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதனால், குமரிக்கடல், மன்னர் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் தொடர்கிறது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீக்கு மேல் அதிக மழை பெய்யலாம் என்று அர்த்தம். 4 மாவட்டங்களில் பெய்தது அதிகனமழை தான். மேகவெடிப்பு இல்லை.
இதற்கு முன் 1931ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த 20 செ.மீ மழை தான் அதிகபட்ச மழை ஆகும். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் 44 செ.மீ அளவில் மழை பெய்துள்ளது. மழை அளவை பொறுத்தவரையில் கனமழை, மிக கனமழை, அதி கனமழை என்று 3 பிரிவுகளில் கணிக்கிறோம். 20 செ.மீ.க்கு மேல் பெய்யும் மழை அதி கனமழை என்று கூறுகிறோம். 20 செ.மீ.க்கு மேல் எவ்வளவு மழை பெய்யும் என்று கூறமுடியாது. 90 செ.மீ வரை மழை பெய்யும் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. வடகிழக்கு பருவமழை வருங்காலத்தில் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்.