பாராளுமன்ற தேர்தலையொட்டி மக்களுக்கு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய பாஜக மோடி அரசு. அதில் குறிப்பாக தமிழகத்தில்தான் அதிக திட்டங்களை அறிவிக்க உள்ளதாக அதிமுக மேலிட புள்ளிகள் நம்மிடம் கூறினார்கள். மேலும் அவர்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் ஆளுகிற எடப்பாடி அரசிற்கும், மத்தியில் ஆள்கிற மோடி அரசிற்கும் மக்களிடம் அதிருப்தியும், வெறுப்பும் இருப்பது உண்மைதான்.
இந்த ஐந்து வருடமாக ஒரு எம்பி தொகுதியில் என்னதான் வேலை நடந்தது என்ற எதிர்கேள்விகளும் உள்ளது. இதை சமாளிக்கத்தான் 40 தொகுதிகளுக்கும் திட்டங்கள் அறிவிக்க உள்ளது மோடி அரசு. குறிப்பாக தென்மாவட்டத்தில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் மற்றொரு இடத்தில் சட்டக்கல்லூரி, தொழில் துறையில் ஏற்றுமதிக்கான திட்டங்கள், விவசாயத்தில் விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய தனி அமைப்பு, மத்திய அரசு பங்களிப்போடு குடிநீர் திட்டங்கள், நெடுஞ்சாலைகளில் நுழைவு பாலங்கள், சில ரயில்வே திட்டங்கள் என ஏராளமான திட்ட அறிவிப்புகளை கையில் வைத்துள்ளது மத்திய அரசு.
இதை அறிவிக்கும்போது ஒவ்வொரு தொகுதி மக்களும் ஆஹா... அற்புதமான திட்டங்கள் ஆச்சர்யப்படுவார்கள். அரசு மீதான எதிர்ப்பு அரசியலை சமாளிக்க கூட்டணி பலத்தோடு இனி அறிவிக்கப்போகும் திட்டங்களே வெற்றி பாதைக்கு கொண்டுசெல்லும் என பாஜக மேலிடம் நம்புகிறது என்றார்கள்.
இன்றைய நிலவரப்படி அதிமுக அணியிலுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளில் கன்னியாகுமரி, கோயமுத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளும் வெற்றி உறுதி என பாஜக சர்வே டீம் கூறியிருக்கிறது. ஆனால் பாஜக மேலிடம் போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
ஆக தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவிக்கப்போகும் திட்டங்கள் மக்களை திகைப்பில் ஆழ்த்த உள்ளது.