மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் விழுந்துவிட்டான் என்ற தகவல்கள் பரவியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களும் தீபாவளிக்காக பொருள் வாங்குவதை மறந்து தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்துவிட்டனர். பலர் நேரில் காண புறப்பட்டுவிட்டனர். இளைஞர்கள் பலர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று தாங்கள் உருவாக்கிய கருவிகளுடன் பயணித்தனர். மீட்புப் பணியில் தாமதம் என்ற செய்தி அறிந்து பலர் அவசரமாக கருவிகளை உருவாக்கிக் கொண்டு கிளம்பினார்கள். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் தங்களின் விருப்ப கடவுள்களிடம் வேண்டுதல்களை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து கண்களை துடைத்துக் கொண்டனர்.
எப்படியும் குழந்தை சுஜித் தீபாவளி கொண்டாட வருவான். யாராவது அவனை மீட்டு வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. மத்திய, மாநில மீட்புக்குழுக்கள், என்எல்சி, ஒஎன்ஜிசி, என்று பல அரசு தரப்பு வல்லுநர்கள் வந்துவிட்டார்கள் மீட்கப்படுவான் சுஜித் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அனைவரின் நம்பிக்கையும் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள்ளேயே போட்டு புதைக்கப்பட்டுவிட்டது. நம்மை காக்க போராடுகிறார்கள் நாம் வெளியே வருவோம் என்ற சைகை மூலம் அசைத்த கைகள் தனது இறுதிப் பயணம் என்பதை உணரவில் அந்த பிஞ்சு.
இந்தநிலையில்தான் சனிக்கிழமை காலை மீட்பு முயற்சியில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினரின் பார்முலா சரியானதுதான் என்றாலும் விரல்கள் கூட தெரியாமல் மண் சரிந்திருந்ததால் முயற்சி தோல்வியடைந்தது. வெற்றியாக்க அவகாசம் கிடைக்காமல் தவித்தனர். அதன் பிறகு அரசு இயந்திரங்கள் வந்த பிறகு தனியார் குழு, தனி நபர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. கனத்த இதயத்தோடு வீடு திரும்பிய வீரமணி குழுவினருக்கு திங்கள் கிழமை மதியம் மீண்டும் அழைப்பு வந்து சென்றனர்.
அங்கே நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்கள் வீரமணி குழுவினர்..
இரண்டாவது முறையாக அழைக்கப்பட்டதால் எப்படியும் குழந்தையை மீட்போம் என்ற நம்பிக்கையோடு மேலும் சில உபகரணங்களை செய்து கொண்டு 7 பேர் சென்றோம். போனவுடன் மீட்புப் பணியில் இருந்த என் எல் சி, ஒ என் ஜி சி குழுவினர் எங்கள் பார்முலா பற்றி கேட்டனர் செயல் விளக்கத்தோடு சொன்னோம். இந்த முயற்சி பலன் தரும். காத்திருங்கள் இரவு 10 மணிக்கு உங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்றனர். காத்திருந்தோம் 12 மணி ஆனது. பரபரப்பாக இருந்தனர் அந்த அடைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு பகுதியில் சற்று நேரத்தில் நம்மை அழைப்பார்கள் என்று தயாராக நின்றோம்.
ஆனால் அந்த நேரத்தில்தான் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதாக ஒரு பாலிதீன் பையோடு ஆம்புலன்ஸ் நோக்கி சென்றார்கள். மனது வலித்தது எங்களுக்கு குழந்தையை உயிருடன் மீட்க முதல்நாட்களில் போராடினோம். இப்பவும் அதற்காகத் தான் வந்தோம் ஆனால் இப்படி நடந்துவிட்டதே என்று கண்ணீரோடு கிளம்பினோம்.
இப்பவும் எங்களால் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்ற மன அழுத்தம் சாப்பிடக் கூட முடியவில்லை என்றனர் கண்கள் கசிய.
இனியும் இப்படி ஒரு சம்பவம் எங்கேயும் நடக்க கூடாது.