







இரண்டு நாள் டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஓ.பன்னீர்செல்வம் இன்று (25/06/2022) மாலை சென்னை திரும்பினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, அவர் டெல்லி சென்றிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தங்கியிருந்த போது, பிற கட்சித் தலைவர்களைச் சந்தித்து உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு விமான நிலையத்தில் அவரின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வதை ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் சுற்றியும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
அ.தி.மு.க. உட்கட்சிக் குழப்பங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.