வயலில் தெளிக்கப்பட்ட சம்பா விதைகளை காப்பாற்ற காவிரி தண்ணீர் வரவில்லை, மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை காப்பாற்றும் முன்வரவில்லை என்று சொந்த செலவில் விடிய விடிய பாசன வாய்க்கால்களை தூர்வாரினர் நாகை விவசாயிகள்.
சம்பா சாகுபடிக்காக கடந்த 19ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டும், கடைமடை மாவட்டமான நாகையின் பல்வேறு கிராமங்களுக்கு இதுவரை வந்துசேரவில்லை. அப்படியே சில பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் வந்தாலும், ஆறுகளில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களை முறையாக மாவட்ட நிர்வாகம் தூர்வாரப்படாததால், பாசனத்திற்கு தண்ணீர் எட்டவில்லை.
இந்நிலையில் கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் வாக்குறுதியை நம்பி, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பாக சம்பா விதைகளை வயலில் தெளித்திருந்தனர். ஆனால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், வயலில் தெளித்த விதைகளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரஒரத்தூருக்கு செல்லும், ஒரத்தூர் வாய்க்கால் ஆத்தூர் முதல் முட்டம் வரையில் உள்ள 17 கி.மீ தூரம் வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் முன் வராத காரணத்தால் புதுச்சேரி, ஓரத்தூர், ஆத்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் விடிய விடிய தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஒரு ஏக்கருக்கு 500ரூபாய் வீதம் அவர்களுக்குள் வசூல் செய்து, சொந்த செலவில், இரவு பகல் பாராமல், தூர்வாறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள், தங்கள் சொந்த செலவில் தூர்வாரப்படும் வாய்க்கால்களுக்கு அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ பில் போட்டு பண மோசடியில் ஈடுபட வேண்டாம்" என வேண்டுகோளும் வைத்துள்ளனர்.