தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவரும் நிலையில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால், தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றினாலும், சித்த மருத்துவமும் தற்போது நோயைப் போக்கும் என்பதால், சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருகிறது.
நோய்த் தடுப்பு பணியில் சித்தாவும் முக்கியத்துவம் பெற்று தற்போது திருச்சியில் உள்ள காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் உள்ளிட்ட சில சித்த மருத்துவ மூலிகை பவுடர்கள் வழங்கப்படுவதோடு, நோயாளிகளுக்கு யோகா மற்றும் பழமையான விளையாட்டுகள் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. அதோடு மூன்றுவேளையும் நல்ல தரமான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
தற்போது கூடுதலாக, சித்த மருத்துவத்தை நாடி வருபவர்களுக்கு அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை இன்று (29.05.2021) நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்து, பெட்டகத்தைப் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் காலியாக உள்ளன. 70 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளன. தனிமனித இடைவெளி மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால், விரைவில் நோய் குணமாகும் பொதுமக்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். மாநகருக்கு தண்ணீர் வழங்கும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணிகளை ஆய்வுசெய்ய இருக்கிறேன். குடிதண்ணீர் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் செய்துவருகிறோம்.
தொடர்ந்து அரியமங்கலம் பகுதியில் குப்பை அகற்றும் பணியைப் பார்வையிட உள்ளோம். பாதாள சாக்கடை திட்டம் எங்கு இல்லையோ அங்கு விரைவில் செயல்படுத்த உள்ளோம். இப்போது நடந்துகொண்டிருக்கும் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம். மழை காலத்திற்கு முன்னர் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். மழைக் காலத்திற்கு முன்பாக அனைத்துப் பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வாய்க்கால்களில் அதையும் தூர்வாரும் பணிகளை செய்ய இருக்கிறோம். புதிய சாலை பணிகளை ஆய்வுசெய்து அதையும் செய்ய இருக்கிறோம். தொற்று நோய் ஒழிப்பது மட்டுமல்ல அரசுப் பணி மற்றும் மக்கள் தேவைகளையும் செய்வதும்தான் எங்களது நோக்கம். விரைவில் சாலைகள் குடிதண்ணீர் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளோம். மேலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தனை பணிகளும் ஆய்வுசெய்ய உள்ளோம்” எனக் கூறினார்.