கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட தே.புடையூர் கிராமத்தில் தனியார் மருத்துவ கழிவுகள் அழிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையில் மருத்துவ கழிவுகளை அழிக்கும்போது வெளியாகும் புகையினால் சுற்றுப்புறச் சூழலும், விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தோல்வியாதி, சுவாசக்கோளாறு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் கூறி அக்கிராம மக்கள் மருத்துவ கழிவு அழிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த இரு வருடங்களாக விருத்தாசலம் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்த தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி அக்கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர்.
அதையடுத்து சார் ஆட்சியர் பிரசாந்த், இன்று அக்கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதற்காக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அக்கிராம மக்கள் அனைவர் முன்னிலையிலும் சார் ஆட்சியர் பேச வேண்டும் என்று கூறி அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் போராட்டக்குழு நிர்வாகிகளிடம் சார் ஆட்சியர் பிரசாந்த் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு சார் ஆட்சியர் தேர்தல் முடிந்த பிறகு கிராமத்திற்கு நேரிடையாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதேசமயம் தேர்தலில் வாக்களிப்பது மக்கள் கடமை என கூறினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 'தேர்தலை புறக்கணிப்போம், ஓட்டு போட மாட்டோம்' என்று முழக்கமிட்டு சார் ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயன்றபோது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்ததால் நிர்வாக அலுவலரிடம் சென்று வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக கூறி கிராம மக்கள் கலைந்து சென்றனர்.