Skip to main content

அதிமுக சதித்திட்டம்: வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து வழங்க வேண்டும்! திமுக வேட்பாளர் அவசர புகார் மனு!!

Published on 01/01/2020 | Edited on 01/01/2020

வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்குப்பெட்டிகள் திறப்பு முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் வரையிலான நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் வழங்க வேண்டும் என்று சேலம் திமுக வேட்பாளர் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் நத்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். திமுகவைச் சேர்ந்த இவர், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.


தற்போதைய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய மனைவி ஹேமலதா, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

vote counting video record dmk candidate state election commission


இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜன.2, 2020) எண்ணப்படுகின்றன. அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், வைஸ்யா கல்லூரி மையத்தில் எண்ணப்படுகின்றன.


வாக்கு எண்ணிக்கையின்போது ஆளும் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட உள்ளதாக விஜயகுமாரும், அவருடைய மனைவி ஹேமலதாவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புதன்கிழமை (ஜன. 1) மாலை அவசரமாக அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:


ஜன. 2, 2020ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது, ஆளும் அதிமுக கட்சியினரின் தூண்டுதலின்பேரில், தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றாலும், அவர்களை தோல்வி அடைந்ததாக அறிவிக்குமாறு சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளன. அதிமுகவினர் போலி வாக்குச்சீட்டுகளை வெளியில் அச்சிட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்குக் மறைமுகமாக கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது. வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலரின் கையெழுத்து இல்லாத வாக்குச்சீட்டுகளை நிராகரிக்கப்பட வேண்டும். 


அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் வைஸ்யா கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில், அனைத்து வாக்குப்பெட்டிகளும் திறக்கப்படுவது முதல் வாக்குச்சீட்டுகளை பிரித்தல், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்து, அந்தக் காட்சிகளை நகல்களாக வேட்பாளருக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறேன். அப்போதுதான் முறைகேடுகளை தவிர்க்க முடியும். 


வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர் மூலம் திமுகவினரை அச்சுறுத்தவும், மையங்களை விட்டு விரட்டி அடிக்கவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்