கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தினமும் கண்காணிப்பு அறைக்குச் சென்று காணொளி காட்சி மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
அதேபோல், அவ்வப்போது வேட்பாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (21/04/2021) சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன், புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழித் தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்கச் சென்றனர்.
அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சரவணகுமார் பத்திரிகையாளர்களைப் பார்த்து ஒருமையில் திட்டி வெளியேறுங்கள் என மிரட்டியுள்ளார். மேலும், அதிகார தோரணையில் 'வெளியே போ' என ஒருமையில் பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே சென்றுவர எங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகையாளர்கள், ஏ.டி.எஸ்.பி. சரவணகுமாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க போரட்டத்தை முடித்துக் கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.யின் செயல்பாட்டுக்குப் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "எங்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் என்ன உத்தரவு கொடுத்துள்ளாரோ அதன்படி தான் செயல்படுகிறோம். எனவே, மாவட்டத் தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பத்திரிகையாளரை உள்ளே அனுமதிக்க முடியும். அனுமதி இல்லாமல் உள்ளே வந்ததால் பத்திரிகையாளர்களை வெளியேற்றினோம். இதில் எங்கள் தவறு ஒன்றும் இல்லை" என்கின்றனர்.
அதேபோல் சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கூறுகையில், "பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு என்று தனி அனுமதி கிடையாது. அனைத்து இடங்களுக்கும் அனுமதி உண்டு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதை வெளியில் சொல்வதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் உள்ளே என்ன நடப்பது என்பது மக்களுக்குத் தெரியாது. எனவே தேர்தல் ஆணையம், பத்திரிகையாளரை காவல்துறையினர் தடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.