பெரியார் பல்கலையில் பணி நியமனங்களில் நடந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் மீது இரு நபர் குழுவினர் வியாழக்கிழமை (ஏப். 27, 2023) விசாரணை நடத்துகின்றனர். சேலம் பெரியார் பல்கலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்கள் கிளம்பின.
இது குறித்து விசாரிக்க, உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட இரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. பெரியார் பல்கலை மீது பணி நியமன ஊழல் மட்டுமின்றி பதவி உயர்வு, உறுப்புக் கல்லூரி தொடங்குதல், விடைத்தாள் கொள்முதல், கணினிமயமாக்கல், தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி வழங்குதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த ஜன. 30ம் தேதி இக்குழுவினர் முதன்முதலில் விசாரணைக்கு வந்தபோது, பல்கலையில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அடுத்த கட்டமாக, கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி, புகாரில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடந்தது.
இதையடுத்து, இரு நபர் குழு மீண்டும் இன்று (ஏப். 27, 2023) பெரியார் பல்கலையில் விசாரணை நடத்துகிறது. முறைகேடு தொடர்பாக புகார் அளித்த பாமக எம்எல்ஏ அருள், பெரியார் பல்கலை பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த முத்துக்கண்ணன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் செந்தில்குமார், எஸ்எப்ஐ தலைவர் கண்ணன் ஆகிய 7 பேரிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் இருநபர் குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை எழுத்து மூலம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்கள் இருந்தாலும் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.