“ஒழுங்கா நா கேக்குற பணத்த கொடுத்துடு.. இல்லனா உன்ன பத்தி தப்பு தப்பா போஸ்டர் ஒட்டிடுவோம்” என பாதிரியாருக்கு வலைவீசும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியின் ஆடியோ சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
அரியலூர் மாவட்டம் எம்.ஐ.என் நகர் பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமினிக் சாவியோ. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்து வரும் நிலையில், ஆர்.சி. பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பாதிரியார் டோமினிக் சாவியோவிற்கு எதிராகவும், அவர் நடத்தி வரும் பள்ளிக்கு எதிராகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.
மேலும், இந்த முத்துவேல் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி சில கிறிஸ்தவர்களைத் தாக்கியது, இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டியது என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றது.
அதுமட்டுமின்றி, கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தஞ்சை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை மதமாற்றம் செய்யக்கோரி வற்புறுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும் இந்த முத்துவேல் தான். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது டோமினிக் சாவியோவிற்கு எதிராக அவதூறு பரப்பி வந்துள்ளார்.
"கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்துக்களே உஷாராக இருங்கள். உங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்காதீர்கள். அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பிளக்ஸ் போர்டு அடித்து அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் எனவும், பாதிரியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறிக்கொண்டு முத்துவேல் தலைமையில் டோமினிக் சாவியோவை கட்டம் கட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டோமினிக் சாவியோ, தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் பணம் ஏதும் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதன்பிறகு, பாதிரியார் டோமினிக் சாவியோவை பழிவாங்க நினைத்த முத்துவேல், அவரை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்த டோமினிக் சாவியோ முத்துவேல் மீது அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முத்துவேலை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியான முத்துவேலின் ஆடியோ, சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.