மழை விட்டாலும் விடாது அடிக்கும் தூவானம் போல, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு எதிரான அரசியலை, அந்தத் தொகுதியின் நிர்வாகிகள் சிலர் செய்துவருகின்றனர். இத்தனைக்கும் ராஜவர்மன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலை ஏற்று, மோதல் போக்கினைக் கைவிட்டு, மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து சால்வை அணிவித்து, சமாதானக்கொடி காட்டிவிட்டார். ஆனாலும், பழைய பகையை மனதில் நிறுத்தி, எம்.எல்.ஏ.வுக்கு குடைச்சல் தருவது தொடரவே செய்கிறது.
உட்கட்சி பூசலை வெளிக்காட்டும் போஸ்டர்கள்!
கட்சி போஸ்டர், பேனர், அழைப்பிதழ் மற்றும் விளம்பரங்களில் கடைப்பிடிக்கப்படும் ‘ப்ரோட்டாகால்’ மரபினை ராஜவர்மனும் மீறவே செய்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அப்போது மாவட்ட கழக பொறுப்பாளராக இருந்த ராஜேந்திரபாலாஜியின் படமோ, பெயரோ இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார். இந்த ப்ரோட்டாகால் மீறலை, அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு பதிலடி தருவதற்காகவே செய்துவருகிறேன் என்று அப்போது காரணம் சொன்னார்.
‘தற்போதுதான் ராசியாகிவிட்டேனே.. இன்னும் ஏன் என் போட்டோவோ, பெயரோ இல்லாமல் போஸ்டர் ஒட்டுகின்றனர்?’ என்பதுதான் அவரது தற்போதைய ஆதங்கம். ஏனென்றால், 18- ஆம் தேதி சாத்தூரில் நடந்த சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்ட விளம்பரங்களில், தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜவர்மனை இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
ராஜேந்திரபாலாஜி விசுவாசிகளோ “அமைச்சருக்கு எதிராக இந்த மாவட்டத்தில் ராஜவர்மன் கச்சைக் கட்டிக்கொண்டு நின்றதை மறந்துவிட முடியாது. கட்சியின் கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில், பகிரங்கமாக மேடையில், ‘எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று பேசினாரே? அந்தப் பேச்சு எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு அல்லவா தீனி போட்டது? இனி சாத்தூர் தொகுதியில் ராஜவர்மனுக்கு எப்படி சீட் கிடைக்கும்? இந்த மண்ணின் மைந்தன் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளராகி களமிறங்கிவிட்டார். அவருக்குத்தானே அடுத்து சாத்தூர் தொகுதியில் சீட் கிடைக்கும்! தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை அவமரியாதை செய்த ராஜவர்மன், தனக்கான புரோட்டாகால் மரியாதையை எப்பட எதிர்பார்க்கலாம்? மறப்போம்; மன்னிப்போம் என்பது ராஜவர்மன் விஷயத்தில் நடக்கவே நடக்காது” என்று அடித்து சொல்கின்றனர்.
தனது மனக்குமுறலை, கே.டி.ராஜேந்திரபாலாஜி அமர்ந்திருந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்ட மேடையிலேயே சுட்டிக்காட்டிய ராஜவர்மன். “நமக்குள் இருக்கின்ற சில மனமாச்சரியங்களை மறக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் சிலர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். சாத்தூர் தொகுதியில் முகவர் கூட்டம் நடைபெறுகிறது. உங்களுடைய படம் போடவில்லை. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்று கேட்டார்கள். தயவுகூர்ந்து எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள் என்று சொன்னேன். யாரும் என் படம் போட வேண்டிய அவசியமில்லை. சாத்தூர் தொகுதி மக்களின் உள்ளத்திலும் இதயத்திலும் மனதிலும் நான் இருப்பேன். ஆகையினால், தயவு செய்து எங்களைக் குழப்ப வேண்டாம். நான் என்றைக்கும் இந்த தொகுதி மக்களுடைய வேலைக்காரனாக இருந்து, இந்த இயக்கத்திற்கும் கழகத்திற்கும் விசுவாசமாக இருப்பேன்.
திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் அ.தி.மு.க.விலே சில குழப்பங்களைச் செய்து, இங்கே குளிர்காயப் பார்க்கிறார். அவர், சாத்தூர் ராமச்சந்திரன் என்று பெயரைப் போட்டுக்கொண்டு, இந்தத் தொகுதிக்கு என்ன நல்லது செய்திருக்கிறார்? நீங்கள் 20 ஆண்டு காலம் இங்கே சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அமைச்சராகவும் இருந்திருக்கின்றீர்கள். இந்த தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் செய்திருக்கின்றீர்கள்? இது மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வரும், துணை முதல்வரும், அண்ணன் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் என்னை வேட்பாளராக நிறுத்தி, நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன், இந்த ஒரு வருட 7 மாத காலத்தில், நான் சாத்தூர் தொகுதி மக்களுடைய உள்ளத்திலே நீக்கமற நிறைந்திருக்கிறேன் என்பது பொதுமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கும் தெரியும்.
ஆகவே, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், 2021-ல் கே.டி.ராஜேந்திரபாலாஜி எங்கே வேட்பாளராக நிற்கிறாரோ, அவரை எதிர்த்து களமிறங்க வேண்டும். எனவே, இரவினில் ஒரு ஆட்டம்; பகலிலே ஒரு ஆட்டம் போடுவது இனிமேல் இந்த மாவட்டத்தில் நடக்காது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். எந்த தொகுதியில் நின்றாலும், அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அ.தி.மு.க. பாடம் புகட்டும்” என்று கொளுத்திப் போட்டார்.
கூட்டம் முடிந்ததும்,‘என்னண்ணே இப்படி பேசிட்டீங்க?’என்று கேட்ட விசுவாசிகளிடம், இராமாயணத்தில் சீதையிடம் கணையாழி கொடுக்க வந்த அனுமனை பிரம்மாஸ்திரத்தால் கட்டிப்போட்டு, ராவண சபைக்கு இழுத்துவந்து, உருவத்தைக் கேலி செய்து, இருக்கை தராமல் அவமதித்ததையும், இலங்கை சக்ரவர்த்தியான ராவணனுக்கு எதிரே, தன் வாலினாலேயே கோட்டை கட்டி, அதன் மீது அமர்ந்து அனுமன் வாதம் புரிந்ததையும், பிறகு அனுமனின் வாலில் தீ வைக்கப்பட்டு, அந்த வாலாலேயே தீயால் இலங்கை அழிந்ததையும் கூற, இடைமறித்த விசுவாசிகள்‘ அப்படியென்றால் நீங்கள் அனுமனா? எம்.எல்.ஏ. சீட் தரவில்லையென்றால், அழிப்பு வேலையில் ஈடுபடுவீர்களா?’என்று கேட்டதற்கு, ‘பார்க்கத்தானே போகின்றீர்கள்!’என்று சிரித்திருக்கிறார் ராஜவர்மன். ஆக, தேர்தலின்போது சாத்தூர் தொகுதியை, மா.செ. ராஜேந்திரபாலாஜியும், எம்.எல்.ஏ. ராஜவர்மனும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் என்பது, இப்போதே தெரிந்துவிட்டது.