
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கிளைச் சிறைச்சாலை உள்ளது. திண்டிவனம் நல்லியக்கோடன் நகரை சேர்ந்த ராமு என்பவரது மகன் பாரதி மணிகண்டன் வயது 26. இவர், திண்டிவனம் கிளை சிறைச்சாலையில் காவலராகப் பணி செய்து வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் சிறையில் பணியிலிருந்த பாரதி மணிகண்டன், பிளேடால் தனது இடது கை மணிக்கட்டில் தனக்குத் தானே கிழித்துக் கொண்டுள்ளார்.
இதனால் அவர் கையில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதி மணிகண்டன், பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனை புறக்காவல் போலீசாரிடம் பாரதி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கிளைச் சிறையில் பணியில் இருந்த காவலர் தன்னைத்தானே பிளேடால் கீறிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திண்டிவனம் போலீசார் பாரதி மணிகண்டன் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதற்கு காரணம் வேலை பளுவா அல்லது அவர்களது குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.