தமிழகத்தில் கஞ்சா புகையிலை போதை மாத்திரை ஊசி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் கடந்த எட்டாம் தேதி இணையதளம் மூலம் போதை ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு வீட்டில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டிவனம் நகரில் உள்ள ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் சிவகுரு (வயது 20). இவரது வீட்டில் நேற்று போலீசார் போதை ஊசி மற்றும் மருந்துகளை கைப்பற்றியதோடு, விற்பனை செய்து வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த நிதீஷ் (வயது 22), பிரவீன் ராஜ் (வயது 25) மற்றும் கோபிநாத் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 74 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் இணையதளம் மூலம் போதை ஊசிகள் மருந்துகளை வரவழைத்து பயன்படுத்தியதோடு மற்றவர்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் நித்திஷ் என்ற இளைஞர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.