விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். வழக்கம்போல் நேற்று மாலை திண்டிவனம் நகரில் உள்ள ரொட்டிக்கார தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்தப் பணியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிராஜ் மிஞ் (வயது 22) மற்றும் அவருடன் மேலும் 3 வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
ஜல்லி சிமெண்ட் கலந்த கலவையை சாக்கடை கால்வாய் பள்ளத்தில் கொட்டிச் சமப்படுத்தும் பணியில் சிராஜ் மிஞ் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்கு வெட்டப்பட்ட கால்வாயின் கரை சரிந்து விழுந்தது. இதில் சிராஜ் மிஞ் சிக்கிக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அருகில் இருந்த பொக்லைன் இயந்திரம் மூலம் சிராஜ் மிஞ் மீது மூடி இருந்த மண்ணை அகற்ற ஒரு மணி நேரம் போராடி மிஞ்சை வெளியே மீட்டுக் கொண்டு வந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிராஜ் மிஞ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை பணியின் போது வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.