விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாகத் தீவைத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு அந்தக் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர்.
ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று பிரேமலதா கூறியதையடுத்து ஜெயபால் குடும்பத்திற்கும் அவரது பெட்டிக் கடைக்கும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமதி என்பவர் ஜெயஸ்ரீ வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முருகன் மனைவி அருவி, கலியபெருமாள் மனைவி சுந்தரவல்லி தலைமையில் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அவர்களது உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திருவெண்ணைநல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் எரித்துக் கொலைசெய்யப்பட்ட ஜெயஸ்ரீ கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்ட 2 பேர் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும், சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பிவைத்தார்.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரோ, "மாணவி ஜெயஸ்ரீ வழக்கில் உண்மையான குற்றவாளியை போலீஸ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளது. விசாரணை சரியான திசையில் சென்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்'' என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீயின் பெற்றோருக்குத் தமிழக அரசின் உதவியாக கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஐந்துலட்சம் காசோலை வழங்கினார். செய்தி ஊடகங்களுக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படச் செய்தியில் சிறுமதுரை கிராமத்தில் தீ விபத்தில் மாணவி ஜெயஸ்ரீ உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவி தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, அது கொலை வழக்காக காவல் துறையில் வழக்கும் பதிவுசெய்துள்ள நிலையில் அரசின் செய்தித் தொடர்புத் துறை தீ விபத்து என செய்தி கொடுத்துள்ளது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. அதன்பின்னரே, அரசின் செய்திக்குறிப்பில் 'தீ வைக்கப்பட்டு இறந்த' என மாற்றப்பட்டுள்ளது.
தர்மபுரி மாணவிகள் வழக்கிலேயே, குற்றவாளிகளை உரிய தண்டனை காலம் முடியும் முன் விடுவித்த அரசுதானே, இப்போது குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை கிடைக்கும் முன்னே கொலை வழக்கை, விபத்தாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் சிறுமதுரை கிராம மக்கள்.