
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் 30 ந் தேதி மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அதே ஊரில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த கிழவிதம்மம் ஊரணியில் காட்டாமணக்கு செடிகள் நிறைந்த புதரில் சடலமாக கிடப்பதாக தகவல் வெளியானது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றியபோது, உடலில் ஏராளமான காயங்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடந்தது. தகவல் அறிந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஏம்பல் பேருந்து நிலையம் அருகே பூ கடை நடத்தி வரும் மாரிமுத்து மகன் சாமுவேல் (எ) ராஜா (பல கோயில்களில் பூசாரியாக உள்ளவர்) சம்மந்தப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்ற தகவல் கிடைத்து. அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தான் ஒருவனே இந்த செயலில் ஈடுபட்டதாக ராஜா கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏம்பல் கிராம மக்கள் ஒன்று கூடி கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் கிராம மக்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த மாதம் கந்தர்வகோட்டை நொடியூர் மாணவி. இந்த மாதம் ஏம்பல் மாணவி என்று தொடர்ந்து பெண் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்வதால் பெற்றோர்களும், மாவட்ட மக்களும் அச்சத்தில் உள்ளனர்.